காலப் பெயர்
காலம் என்பது, “பொருளிடங்காலம்’ என்னுந் தொடரிற் போல் அறுவகைப் பொருளில் ஒன்றையும், “முற்காலம்’, “தற்காலம்’ எனப் பெருமுறையான காலப் பகுதியையுங் குறிக்கும். பொழுது என்பது, பெரும்பொழுது சிறுபொழுது என அடையடுத்து நின்று, முறையே, இருமாத அளவான பருவ காலத்தையும் பத்து நாழிகையளவான நாட்பகுதியையுங் குறிக்கும். (இளவேனில் முதுவேனில் கார் குளிர் முன்பனி பின்பனி என்பன, அறுபெரும் பொழுதுகள்; காலை நண்பகல் எற்பாடு மாலை யாமம் வைகறை என்பன, அறு சிறுபொழுதுகள்.) வேளை என்பது, “பகல்வேளை’, “இராவேளை’, “காலை வேளை’, “மாலைவேளை’ என நாட்பகுதியைக் குறிக்கும். நேரம் என்பது, மிகக் குறுகிய காலப்பெயராய், “அவன் வந்தநேரம் எழுதிக்கொண்டிருந்தேன்’, என வினைநிகழ் சிறு காலத்தையும், “இவ் வினை செய்ய ஒரு மணிநேரம் செல்லும்’, என வினை நிகழ்கால அளவையுங் குறிக்கும். சமையம் என்பது, நீண்டதும் குறுகியதுமான காலப்பெயராய், ஒரு பொருள் ஒன்றற்குச் சமைந்தஅல்லது பக்குவமான நிலையை மட்டும் உணர்த்தும். எ-டு: சமையம் பார்த்து வந்தான். அமையம் என்பது, சந்தர்ப்பம். செவ்வி என்பது, ஒருவனின் மனம் செவ்வையான அல்லது இசைவான நிலை. அற்றம் என்பது, ஒருவனது விழிப்பற்ற நிலை....