இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காலப் பெயர்

காலம் என்பது, “பொருளிடங்காலம்’ என்னுந் தொடரிற் போல் அறுவகைப் பொருளில் ஒன்றையும், “முற்காலம்’, “தற்காலம்’ எனப் பெருமுறையான காலப் பகுதியையுங் குறிக்கும். பொழுது என்பது, பெரும்பொழுது சிறுபொழுது என அடையடுத்து நின்று, முறையே, இருமாத அளவான பருவ காலத்தையும் பத்து நாழிகையளவான நாட்பகுதியையுங் குறிக்கும். (இளவேனில் முதுவேனில் கார் குளிர் முன்பனி பின்பனி என்பன, அறுபெரும் பொழுதுகள்; காலை நண்பகல் எற்பாடு மாலை யாமம் வைகறை என்பன, அறு சிறுபொழுதுகள்.) வேளை என்பது, “பகல்வேளை’, “இராவேளை’, “காலை வேளை’, “மாலைவேளை’ என நாட்பகுதியைக் குறிக்கும். நேரம் என்பது, மிகக் குறுகிய காலப்பெயராய், “அவன் வந்தநேரம் எழுதிக்கொண்டிருந்தேன்’, என வினைநிகழ் சிறு காலத்தையும், “இவ் வினை செய்ய ஒரு மணிநேரம் செல்லும்’, என வினை நிகழ்கால அளவையுங் குறிக்கும். சமையம் என்பது, நீண்டதும் குறுகியதுமான காலப்பெயராய், ஒரு பொருள் ஒன்றற்குச் சமைந்தஅல்லது பக்குவமான நிலையை மட்டும் உணர்த்தும். எ-டு: சமையம் பார்த்து வந்தான். அமையம் என்பது, சந்தர்ப்பம். செவ்வி என்பது, ஒருவனின் மனம் செவ்வையான அல்லது இசைவான நிலை. அற்றம் என்பது, ஒருவனது விழிப்பற்ற நிலை.

பொருள் வகை

பொருள் - காட்சி, கருத்து ஆகிய இரண்டற்கும் பொதுவான பொருள்; பண்டம் - கட்புலனானதும் கனவடிவுள்ளதுமான உயிரற்ற பொருள்; சரக்கு - காய்ந்த பொருள்; தாரம் - இயற்கை விளைபொருள்; ஆக்கம் - செயற்கை விளைபொருள்; செய்பொருள் - கையாற் செய்யப்படும் பொருள்; உரு - கன வடிவப் பொருள்; உருவம் - பெருங் கனவடிவப் பொருள்; உருப்படி - தனிப்பட்டதும் உயிரற்றதும் ஒன்றன்படியுமான கனவடிவுப்பொருள் (article); உடைமை - உடம்பிலுள்ள ஆடையணிப்பொருள்; மதி - அளவிடப்பட்டு வரி விதிக்கப்படும் கடல் வாணிகப்பொருள் (எ-டு: ஏற்றுமதி, இறக்குமதி); சொம் - சொந்தப் பொருள்; சொத்து - சொந்தப் பொருட்டொகுதி (property). செல்வம் - விலைமதிப்புள்ள பொருட்டொகுதி. வெறுக்கை - செறிந்த செல்வம்; காசு  - தனி நாணயம் (coin); பணம் - காசுத் தொகுதி (money). ~ #பாவாணர் (ஒருபொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

குள வகைகள்

குளம் - குளிக்கும் நீர்நிலை; தெப்பக்குளம் - தெப்பத்தேர் ஓடும் குளம்; ஊருணி - ஊரால் உண்ணப்படும் அல்லது ஊர்நடுவிலுள்ள குளம்; ஏரி - ஏர்த்தொழிற்கு நீர்பாய்ச்சும் குளம்; கண்வாய் - சிறு கால்வாயால் நீர் நிரம்பும் குளம்; தடம், தடாகம் - அகன்ற அல்லது பெரியகுளம்; கயம் - ஆழமான குளம்; குட்டம் - குளத்தின் ஆழமான இடம்; குட்டை - சிறு குளம்; குண்டு - வற்றிய குளத்தில் நீர்நிறைந்த கிடங்கு; பொய்கை - மலையடுத்த இயற்கையான குளம்; சுனை - நீர்சுரக்கும் மலைக்குண்டு; கிணறு - வெட்டப்பட்ட ஆழமான சிறுநீர்நிலை; கேணி - மணற்கிணறு; கூவல் - சிறுகிணறு; துரவு - சுற்றுக் கட்டில்லாத பெருங்கிணறு; மடு - அருவி விழும் கிடங்கு. ~ #பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)