மருதம்
மருதம் - மருதம் பெயர்மூலம்
மல் = வளம். "மற்றுன்றுமாமலரிட்டு" (திருக்கோ.178)
மல் -> மல்லல்
மல்லல் =
1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788).
2. அழகு. "மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.)
3.பொலிவு(சூடா.).
மல் -> மல்லை
மல்லை = வளம். "மல்லைப்பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).
மல் -> (மர்) -> மருது
மருது = ஆற்றங்கரையும் பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்க நிலத்தில் வளரும் மரம்.
ஒ.நோ: வெல் -> வில் -> (விர்) -> விருது = வெற்றிச் சின்னம்.
"பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்" (கம்பரா. தாடகை.5)
மருது -> மருதம்
மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.
"அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
துறையணி மருது தொகல்கொள வோங்கி" (அகம். 97)
"வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின்" (புறம்.52)
"பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே." (புறம்.351)
"மருதுயர்ந் தோங்கிய விரிபூம்பெருந்துறை" (ஐங்.33)
"கரைசேர் மருத மேவி" (ஐங்.74)
"திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை" (கலித்.27)
"மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு" (பதிற்.23)
"வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை" (சிலப்.14:72)
"காவிரிப் பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த" (குறுந்.258)
இம் மேற்கோள்களிலெல்லாம், மருதமரம் ஆற்றையும் பொய்கையையும் வயலையுமே அடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.
~ பாவாணர் (ஐந்திணை பெயர்மூலம்: தமிழர் வரலாறு 1: பக். 101)
கருத்துகள்
கருத்துரையிடுக