நெய்தல்
நெய்தல் - நெய்தல் பெயர்மூலம்)
நள்ளுதல் =
1. அடைதல்."உயர்ந்தோர் தமைநள்ளி" (திருவானைக்.கோச்செங்.25).
2. செறிதல். "நள்ளிருள்யாமத்து" (சிலப்.15:105).
3. கலத்தல், பொருந்துதல்.
4.நட்புச்செய்தல். "நாடாது நட்டலின்கேடில்லை" (குறள்.761) நள்ளார் = பகைவர்.
நள் -> நண்.
நண்ணுதல் =
1.கிட்டுதல்."நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது"(திருவாச.12:17).
2.பொருந்துதல்.
3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர்."நண்ணாரும் உட்குமென் பீடு" (குறள்.1088)
நள் -> நளி.
நளிதல் =
1. செறிதல்."நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்"(மலைபடு.197).
2. ஒத்தல். "நாட நளிய நடுங்கநந்த" (தொல்.1232)
நள் -> நெள் -> நெய்.
நெய்தல் =
1.தொடுத்தல். "நெய்தவை தூக்க" (பரிபா.19:80).
2.ஆடை பின்னுதல். "நெய்யு நுண்ணூல்" (சீவக.3019).
3.ஒட்டுதல்.
நெய் =
1. ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். "நீர்நாண நெய்வழங்கியும்"(புறம்.166:21).
2. வெண்ணெய். "நெய்குடை தயிரினுரையொடும்" (பரிபா.16:3).
3. எண்ணெய்."நெய்யணி மயக்கம்" (தொல்.பொருள்.146).
4.புனுகுநெய். "மையிருங் கூந்தல்நெய்யணி மறப்ப" (சிலப்.4:56).
5. தேன்."நெய்க்கண் ணிறாஅல்" (கலித்.42).
6.அரத்தம்."நெய்யரி மற்றிய நீரெலாம்"(நீர்நிறக்.51).
7.கொழுப்பு. "நெய்யுண்டு"(கல்லா.71).
8. நேயம், நட்பு. "நெய்பொதிநெஞ்சின் மன்னர்" (சீவக.3049).
நெய் -> நேய் -> நேயம்
நேயம் =
1. நெய் (பிங்.).
2. எண்ணெய் (பிங்.).
3.அன்பு. "நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்து" (திருக்கோ.39).
4.தெய்வப் பற்று. "நேயத்தே நின்ற நிமலனடிபோற்றி" (திருவாச.1:13)
நேயம் -> நேசம்
நேசம் =
1.அன்பு. "நேசமுடையவடியவர்கள்" (திருவாச.9:4) .
2. ஆர்வம்."வரும்பொரு ளுணரு நேசம்" (இரகு. இரகுவு.38).
நேசம் -> நேசி. நேசித்தல்.
1. அன்புவைத்தல். "நேசிக்குஞ் சிந்தை" (தாயு.உடல்பொய்.32).
2. மிக விரும்புதல்.
"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்" (தாயு. பரிபூர.13).
நெய் -> நெய்தல்
நெய்தல் = நீர் வற்றியகாலத்திலும் குளத்துடன் ஒட்டியிருக்கும் செடிவகை,அச் செடி வளரும் கடற்கரை நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்.
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு" (மூதுரை,17) என்பதை நோக்குக.
~ பாவாணர் (ஐந்திணை பெயர்மூலம்: தமிழ் வரலாறு 1: பக். 102)
கருத்துகள்
கருத்துரையிடுக