உட்கொள்ளுதல் வகைகள்

 


அசைத்தல் - விலங்கு போல் அசையிட்டுத் தின்னுதல்;
அதுக்குதல் - சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி  ஒதுக்குதல்;
அரித்தல் - பூச்சி புழுப்போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்;
அருந்துதல் - சிறிதுசிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்;
ஆர்தல் - வயிறு நிரம்ப வுண்ணுதல்;
உண்ணுதல் - எதையும் உட்கொள்ளுதல்;
உதப்புதல் (குதப்புதல்) - வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சவைத்தல்;
உறிஞ்சுதல் - ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்;
ஒதுக்குதல் - ஒரு கன்னத்தில் அடக்குதல்;
கடித்தல் - கடினமானதைப் பல்லால் உடைத்தல்;
கரும்புதல் - ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்;
கறித்தல் - மெல்லக் கடித்தல்;
குடித்தல் - கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல்;
குதட்டுதல் - கால்நடை போல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்;
கொறித்தல் - ஒவ்வொரு கூலமணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்;
சப்புதல் - சவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல்;
சவைத்தல் - வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல்;
சாப்பிடுதல் - சோறுண்ணுதல்;
சுவைத்தல் - ஒன்றன் சுவையை நுகர்தல்;
சூப்புதல் - கடினமானதைச் சப்புதல்;
தின்னுதல் - மென்று உட்கொள்ளுதல்; நக்குதல் - நாவினால் தொடுதல்;
பருகுதல் - கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல்;
மாந்துதல் - ஒரே விடுக்கில் அல்லது பெருமடக்காய்க் குடித்தல்;
முக்குதல் அல்லது மொக்குதல் - வாய் நிறைய ஒன்றையிட்டுத் தின்னுதல்;
மெல்லுதல் -- பல்லால் அரைத்தல்; மேய்தல் - மேலாகப் புல்லைத் தின்னுதல்;
விழுங்குதல் - மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட்கொள்ளுதல்;
மிசைதல் - மிச்சில் உண்ணுதல்.

~ #பாவாணர் (ஒருபொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொற்றவை (Kotravai) - தமிழ்ப்பெயர்கள்

ஞாயிறுமறைவு (Sunset) - தமிழ்ச்சொற்கள்

Sun - தமிழ்ச்சொற்கள்