இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடுங்கொச்சை - செந்தமிழ் வடிவம்

கடுங்கொச்சை - செந்தமிழ் வடிவம் * லோல்படுதல் - அல்லோலப்படுதல் * லோலோ என்று அலைதல் - ஓலம் ஓலம் என்று அலைதல் * ராவடிசெய்தல், டாவடித்தல் - அடாவடி செய்தல் * லடாய் - அடலுதல் (சண்டை பிடித்தல்) * தபேலா - பதலை (இசைக்கருவி) * டமாரம் - தமருகம் (இசைக்கருவி) * டொங்கு விழுதல் - தொங்கு விழுதல் * டபால் என விழுதல் - தொபீல் என விழுதல் * டபாய்த்தல் - தப்பு ஆய்தல் (பிறர் குற்றங்களைச் சுட்டிக் காட்டித் தன் குற்றம் மறைத்தல்) * டோக்கரா தருதல் - தாக்கல் தருதல், தாக்கலா தருதல் (ஒருவரைத் திடுமெனத் தாக்கித் தள்ளிவிட்டு ஓடிப்போதல்) தனித்தமிழ் காப்புக்கும் மரபு வழிப்பட்ட தூய்மைக்கும் கொச்சைச் சொற்களைச் செவ்வியல் வடிவில் ஆளுதல் இன்றியமையாதது எனப் பாவாணர் கண்டறிந்தார். ~  இரா மதிவாணன் (பாவாணரின் ஆய்வு நெறிகள்)

காற்று வகை

* கொண்டல் - கிழக்கினின்று வீசும் மழைக்காற்று * தென்றல் - தெற்கினின்று வீசும் இனிய மென்காற்று * கோடை - மேற்கினின்று வீசும் வெப்பமான வன்காற்று; * வாடை - வடக்கினின்று வீசும் குளிர் காற்று. * ஆவி (spirit, vapour) * புயல் (cyclone) * வளி (wind) * சூறாவளி (tempest) * காற்று (gas) * அன்றமை (air) * சுழல் (whirlwind) * வேற்றலம் (வாதம்) * வெம்பாவி (mist) * நீராவி (steam) * உயிர் (life) ~ பாவாணர் (சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் பக். 41)

மருதம்

 மருதம் - மருதம் பெயர்மூலம் மல் = வளம். "மற்றுன்றுமாமலரிட்டு" (திருக்கோ.178) மல் -> மல்லல்  மல்லல் =  1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788).  2. அழகு. "மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.)  3.பொலிவு(சூடா.). மல் -> மல்லை மல்லை = வளம். "மல்லைப்பழனத்து" (பதினொ. ஆளுடை. திருவுலா.8). மல் -> (மர்) -> மருது  மருது = ஆற்றங்கரையும் பொய்கைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்க நிலத்தில் வளரும் மரம். ஒ.நோ: வெல் -> வில் -> (விர்) -> விருது = வெற்றிச் சின்னம். "பருதி.....விருது மேற்கொண்டுலாம்வேனில்" (கம்பரா. தாடகை.5) மருது -> மருதம்  மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம், வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு. "அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத் துறையணி மருது தொகல்கொள வோங்கி" (அகம். 97) "வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருநல் யாணரின்" (புறம்.52) "பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சி துஞ்சும் ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே...

நெய்தல்

 நெய்தல் - நெய்தல் பெயர்மூலம்) நள்ளுதல் =  1. அடைதல்."உயர்ந்தோர் தமைநள்ளி" (திருவானைக்.கோச்செங்.25).  2. செறிதல். "நள்ளிருள்யாமத்து" (சிலப்.15:105). 3. கலத்தல், பொருந்துதல். 4.நட்புச்செய்தல். "நாடாது நட்டலின்கேடில்லை" (குறள்.761) நள்ளார் = பகைவர். நள் -> நண்.  நண்ணுதல் =  1.கிட்டுதல்."நம்பனையுந் தேவ னென்று நண்ணுமது"(திருவாச.12:17).  2.பொருந்துதல்.  3.நட்புச் செய்தல்.நண்ணுநர் = நண்பர் (பிங்.). நண்ணார் = பகைவர்."நண்ணாரும் உட்குமென் பீடு" (குறள்.1088) நள் -> நளி.  நளிதல் = 1. செறிதல்."நளிந்துபலர் வழங்காச் செப்பந் துணியின்"(மலைபடு.197).  2. ஒத்தல். "நாட நளிய நடுங்கநந்த" (தொல்.1232) நள் -> நெள் -> நெய்.  நெய்தல் =  1.தொடுத்தல். "நெய்தவை தூக்க" (பரிபா.19:80).  2.ஆடை பின்னுதல். "நெய்யு நுண்ணூல்" (சீவக.3019). 3.ஒட்டுதல். நெய் =  1. ஒட்டும் பொருளாகிய உருக்கினவெண்ணெய். "நீர்நாண நெய்வழங்கியும்"(புறம்.166:21). 2. வெண்ணெய். "நெய்குடை தயிரினுரையொடும்" (பரிபா.16:3). 3. எண்ணெய்....

குறிஞ்சி

 குறிஞ்சி - குறிஞ்சி பெயர்மூலம்: குறி = அடையாளம், காலம், அளவு, தடவை. குறி -> குறிஞ்சி  குறிஞ்சி = ஒரு பல்லாண்டுக்காலஅளவைக் குறிக்கும் பூ, அப் பூப்பூக்கும் செடி, அச்செடி இயற்கையாக வளரும் மலை, மலையும் மலை சார்ந்த இடமும், மலைநாடு. ஒ.நோ: நெரி -> நெரிஞ்சி -> நெருஞ்சி. கோடைக்கானல் மலையிலும் நீலமலையிலும் உள்ள குறிஞ்சிச் செடிகள், பன்னீராண்டிற் கொருமுறை பூக்கின்றன. நீலமலையிலுள்ள தொதுவர் (தோடர்), குறிஞ்சி பூக்குந்தடவையைக் கொண்டே தம் அகவையைக் கணக்கிட்டுவந்தனர். குமரிநாட்டுக் குறிஞ்சிநில வாணரும் இங்ஙனமே செய்திருத்தல் வேண்டும். ஆங்கிலேயர், இந்தியா முழுதுமுள்ள குறிஞ்சிச்செடிகளை யெல்லாம் ஆய்ந்து, குறிஞ்சிவகைகள் மொத்தம் 46 என்றும், அவை பூக்கும் காலவிடையீடு ஓராண்டு முதல் 16 ஆண்டுவரை பல்வேறு அளவுபட்டதென்றும், கண்டறிந்திருக்கின்றனர்.குமரிநாட்டில் எத்தனைவகை யிருந்தனவோ அறியோம். ~ பாவாணர் (ஐந்திணை பெயர்மூலம்: தமிழர் வரலாறு 1 பக். 100)

முல்லை

 முல்லை - முல்லை பெயர்மூலம்: முல் -> முன் -> முனை முனை = கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி. முல் -> முள் முள் =  1. கூர்மை. "முள்வாய்ச்சங்கம்" (சிலப். 4:78).  2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879). 3. ஊசி.  4. பலாக்காய் முனை. முள் -> முளை  முளை  = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4) முல் -> முல்லை முல்லை =  கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும்.  "முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு" (அகம். 4:1). என்பதில், முல்லையரும்பை வைந்நுனை என்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க.  வை = கூர்மை. ~ பாவாணர் (ஐந்திணை பெயர்மூலம்: தமிழர் வரலாறு 1: பக். 100)

பாலை

 பாலை - பாலை பெயர்மூலம்: பால் -> பாலை = இலையிற் பாலுள்ள செடியுங் கொடியும் மரமுமான பல்வேறு நிலைத்திணையினங்கள், அவை (முது) வேனிலில் தழைக்கும் நிலப்பகுதி, குறிஞ்சி நிலத்திற்கும் முல்லை நிலத்திற்கும் இடைப்பட்ட வறண்ட காடு, மாரியில் தழைத்தும் கோடையில் வறண்டும் இருக்கும் வன்னிலம். பகல் (பகுப்பு) என்னும் சொல்லின் மரூஉத் திரிபான பால் என்னும் வகைப்பெயர்க்கும், பாலை என்னும் நிலைத்திணைப் பெயர்க்கும் தொடர்பில்லை. ~ பாவாணர் (ஐந்திணை பெயர்மூலம்: தமிழர் வரலாறு 1: பக். 101)

அரசர் வகை

 1. ஊர்த்தலைவர்: * குறிஞ்சித்தலைவன் பெயர்கள் - மலையன், வெற்பன், சிலம்பன், பொருப்பன், கானகநாடன். வெற்பு, சிலம்பு, பொருப்பு என்பன மலையின் பொதுப் பெயர்கள் * முல்லைத்தலைவன் பெயர்கள் - குறும்பொறை நாடன், அண்ணல், தோன்றல். * மருதத்தலைவன் பெயர்கள் - ஊரன், மகிழ்நன், கிழவன். * பாலைத்தலைவன் பெயர்கள் - விடலை, மீளி, காளை. * நெய்தல் தலைவன் பெயர்கள் - கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம்புலம்பன். 2. நாட்டுத்தலைவர்:  * குரிசில் - பிரபு * வேள் - குறுநில மன்னன் *குறும்பன் - கொள்ளைத் தலைவன் * மன்னன் - சிற்றரசன் * கோன் அல்லது கோ - அரசன் * வேந்தன் - முடிவேய்ந்த பேரரசன், இந்திரன். ~ பாவாணர் (ஒரு பொருட் பல சொற்கள்: சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் பக். 37)